ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்விப் பயம் வந்து விட்ட காரணத்தினாலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தேவையில்லாத விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், “தங்களுக்குள் பிளவுகள் உள்ள காரணத்தினால் தான், ஐக்கிய தேசியக் கட்சி தேவையில்லாமல் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.
நாம் அரசியல் ரீதியாகவோ, அல்லது கட்சி ரீதியாகவோ அவர்களைப் போல குழம்பவில்லை. நாம் அனைத்து விடயங்களிலும் தெளிவாகத் தான் இருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டையே வெளிநாட்டுக்கு விற்றுவிட்டது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள் என எதும் இன்று நாட்டுக்கு சொந்தமில்லை. இந்த நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாச அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளமையை இட்டு, நாம் மிகவும் கவலையடைகிறோம்.
அம்பாந்தோட்டையை இந்த அரசாங்கம் விற்கும்போது அவர் அமைதியாகவே இருந்தார். இது மக்களின் சொத்தாகும். எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டிய இந்த சொத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
இதற்கெதிராக மக்கள் போராடியபோது கூட, அவர்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால், அமைச்சர் சஜித் பிரேமதாச அது தொடர்பாக எந்தவொரு எதிர்ப்பினையும் வெளியிடவில்லை. சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாற்றமடைந்தால் கூட அவருக்குக் கவலையில்லை.
எமக்கு இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பாக அக்கறையுள்ளது. இதற்காகத் தான் நாம் போராடி வருகிறோம். இதற்காக எமக்கு மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. எனவே, நிச்சயமாக எமது ஆட்சி தான் நாட்டில் அமையும்” என்று குறிப்பிட்டார்.

