உலக தலைவர்களை அதிரவைத்த கிரேட்டா தன்பர்க்கின் ஐ.நா உரை

252 0

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா(16) உலக தலைவர்களிடம் சராமரியாக கேள்விகளை முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 74வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் இன்று (24.09.2019) முதல் செப்டம்பர் 30ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் ஏற்பாட்டில், நேற்று(23.09.2019) நடந்த காலநிலை நடவடிக்கை மாநாட்டில்,  சுவீடன் நாட்டை சேர்ந்த 16 வயதையுடைய கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டு பேசினார். இவர், காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு அடித்தளமாக இருப்பவர்.

ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கிரேட்டா பேசியதாவது: நான் இங்கே இருக்கக்கூடாது. பள்ளியில் படித்து கொண்டிருக்க வேண்டும். எனது கனவு, குழந்தை பருவத்தினை நீங்கள்(உலக தலைவர்கள்), வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள். நாம் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகு பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கும் உங்களுக்கு எவ்வளவு தைரியம்.

காலநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க நீங்கள் உண்மையாக முயற்சி எடுக்காவிட்டால், நீங்கள் அரக்கர்கள் தான். இளைய தலைமுறை உங்களை கவனித்து வருகிறது. எங்களை தோல்வியடைய செய்ய நினைத்தால், நாங்கள் உங்களை என்றும் மன்னிக்க மாட்டோம். இவ்வாறு அவர் உலக தலைவர்களிடம் கேள்விகளை முன்வைத்தார்.