மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. மேலும் பலர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய இக்காலக்கட்டத்தில்தான் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது வழக்கம். டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி சாதாரண காய்ச்சல் வந்தவர்களையும் கண்காணித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கோவை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அங்கு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், எழும்பூர் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காய்ச்சல் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு செயல்படுகிறது.
டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு பாசிட்டிவ் உள்ளவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் தயாராக உள்ளனர்.
சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத ஆண் குழந்தை நேற்று முன்தினம் இறந்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 8 மாத குழந்தை லோகித் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டான். குழந்தையின் சிறுநீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டு இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை.
மதுரவாயலை சேர்ந்த அந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்ற போராடியும் முடியாமல் உயிர் இழந்தது. இதேபோல் மற்றொரு 6 வயது சிறுமியும் டெங்குவினால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாடிக்குப்பத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் மீனாட்சி என்ற சிறுமி எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். தீவிர காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.
எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-
தற்போது காய்ச்சல் பாதிக்கப்பட்டு குழந்தைகள் அதிகமாக வருகிறார்கள். வழக்கமாக 70, 80 பேர் வந்த நிலையில் தற்போது 100, 110 ஆக உயர்ந்துள்ளது. அதில் 10 முதல் 15 வரை டெங்கு பாசிட்டிவ் இருக்கிறது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமி மஞ்சுளா நேற்று உயிரிழந்தார். சிறுமியின் தம்பி சக்திவேல் (2½ வயது) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி உள்ளான்.
சிறுமியை காலதாமதமாக கொண்டு வந்ததால் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய ரத்தம் கிண்டி ஆய்வு மையத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறுமி டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? வைரஸ் காய்ச்சலில் இறந்தாரா? என்பது பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்றார்.
இதுகுறித்து பொது சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி கூறியதாவது:-
டெங்கு பாதிப்பினால் 8 மாத குழந்தை லோகித் இறந்துள்ளது. மற்றொரு சிறுமியும் காய்ச்சல் பாதிப்பால் இறந்திருப்பதால் டெங்கு பாதிப்பு இருக்குமா என சந்தேகிக்கிறோம். தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீட்டை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற பொருட்களை வீட்டிற்குள் வைக்கக்கூடாது. கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

