நடிகர் விஜய் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என யாரும் கூறமுடியாது எனவும் அரசியலில் உண்மையான கருத்துக்களை யார் சொன்னாலும் அதை வரவேற்போம் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தலைப்பில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரைப்பட நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என யாரும் கூறமுடியாது. அரசியலில் உண்மையான கருத்துக்களை யார் சொன்னாலும் அதை வரவேற்போம்.
அப்படி உண்மையான கருத்துக்களை அவர்கள் சொல்லவில்லை என்றால் மனசாட்சி அவர்களை உறுத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.
கீழடியில் நடந்து கொண்டிருப்பது அனைத்தும் வெளிப்படையானது. மத்திய அரசால் என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறோம். கீழடி தமிழர்களின் பெருமைகளில் ஒன்று என்பதை யாரும் மறுக்கவில்லை. அது எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

