கோத்தபாய 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை- உதய

205 0

கோத்தாபய ராஜபக்ஷ 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதிலும் அப்போது அதனை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர் தனது மனசாட்சிக்கும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராகச் செயற்படக்கூடாது என்று கருதி, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தனது சகோதரனுக்கு அவர் வாக்களிக்கவில்லை.

மாறாக நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தனது வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான தீர்மானத்தையே அவர் மேற்கொண்டார் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது:

2003 ஆம் ஆண்டில் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டார். எனினம் 2004 ஆம் ஆண்டில் பழைய அணுகுமுறையின்படி அவருடைய பெயர் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ வேட்பாளராகக் களமிறங்கியமையால் அவருக்கு உதவுவதற்கான கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை வந்தார். அப்போது தனக்கு இலங்கையில் இன்னமும் வாக்குரிமை இருப்பதை அறிந்துகொண்டார்.அது மிகவும் முக்கித்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் என்றபோதிலும் கூட தனது சகோதரனுக்காக வாக்களிக்கக்கூடாது என்ற தீர்மானத்தை கோத்தாபய மேற்கொண்டார். ஏனெனில் அவர் ஒரு இலங்கைப் பிரஜையல்ல என்பது வேறு எவருக்கும் தெரியாத போதிலும், அது அவருடைய மனசாட்சிக்குத் தெரியும். தனது சகோதரனின் மீதான நேசத்தை விடவும், நாட்டின் சட்டத்தை முன்நிலைப்படுத்தியே அவர் அன்று செயற்பட்டார். அவருக்கு சேறுபூச முற்படும் அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எனத் தெரிவித்தார்.