எவர் வந்தாலும் கோட்டாபயவை தோற்கடிப்பதே நோக்கம்-அஜித்

207 0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக 4 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

அந்த குழு தேடி பார்த்து, கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுச் செய்ய கூடிய தகுதியான ஒருவரை பெயரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தமது தெரிவை கட்சியின் தெரிவுக் குழுவுக்கு அறிவித்து அதன் மூலம் இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வேட்பாளர் குறித்து கட்சியின் பிரதித் தலைவர், கட்சியின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளர் நிலையை கோரவில்லை எனவும் மாறாக கட்சிக்குள் இன்னும் பலர் அதனை கோருவதாகவும் தெரிவித்தார்.

ராஜபக்ஷ ஒருவரின் பெயர் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரில் இருக்க போவது இல்லை எனவும், ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயரில் ராஜபக்ஷ என்பது கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

விக்ரமசிங்க என்ற பெயருடையவர் மாத்திரம் ஐ.தே.கவின் வேட்பாளராக போவதில்லை எனவும் சுதந்திரம் மிக்க கட்சி என்ற வகையில் தற்போது பலர் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதில் சஜித் பிரேமதாச பிரதானமானவர் எனவும், எனினும் 4 பேரை கொண்ட குழுவே இது குறித்த முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க இரகசிய வாக்கெடுப்பை நடத்தி வேட்பாளர் தெரிவை நடத்தலாம் என தெரிவித்தாரா என இதன்போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

சரியான ஒருவரை தெரிவு செய்து அவரின் பெயரை செயற்குழுவில் முன்வைக்க உள்ளதாகவும் அதற்கமைய எவர் தெரிவானாலும் கோட்டாபயவை தோற்கடிப்பதே நோக்கம் என கூறினார்.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த கட்சி தமது கட்சி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.