ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தே – அசோக்க

196 0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவது நிச்சயம் என இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பான பேச்சுவார்தைகள் தோல்வி அடைந்துள்ளனவா என ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்கவிடம் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை நிறைவடையவில்லை என தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியை அமைக்கவும் அதன் செயலாளர் பதவியை ஐ.தே.க.வுக்கு வழங்கவும் இணங்கியுள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் சஜித் பிரேமதாசவை கோருவதாகவும் அதற்கமைய அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார் எனவும் கூறினார்.

அது குறித்து சஜித் பிரேமதாச எமுத்து மூலம் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் ஐ.தே.க சார்பில் போட்டியிட எவரும் இல்லை எனவும் அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கட்சியின் தலைமைக்கு கட்டாயம் சஜித்தை நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரட்ன போன்ற தலைவர்களும் சஜித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறன்றி அவர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவாளிப்பார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.