யாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் !

240 0

யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மாநகர முதல்வராக பொறுப்பேற்றதன் பின்னர் ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரோடு சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவாகும் எனக் குறிப்பிட்ட முதல்வர் ஆனல்ட் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

ஜேர்மன் நாட்டின் அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும், இலங்கை தொடர்பான நாட்டின் சில நிலைப்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்த உயர்ஸ்தானிகர் புஐணு என்ற அமைப்பினூடாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், கல்வி மற்றும் தொழில் ரீதியாக ஜேர்மன் அரசின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் விரிவாக விளக்கியிருந்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மாநகரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி தொடர்பிலும், மாநகர கட்டடம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் வினவியதற்கு, மாநகரின் புதிய கட்டடத்தொகுதிக்கு மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டமை குறித்தும், இது தவிர நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலமும், இலங்கை அரசின் மூலமும் யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஸ் நிலைய அபிவிருத்தி, யாழ் நகர் அபிவிருத்தி, மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், பாதாள சாக்கடைத்திட்டம் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபப் பணிகள், தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.

சமகால இலங்கை அரசியல் தொடர்பில் வினவியதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வினவியிருந்தார். அது தொடர்பில் முதல்வர் குறிப்பிடுகையில் எமக்கு தேவை புதிய அரச அதிபர் அல்ல. மக்கள் விரும்பும் வேட்பாளரை ஆராய்ந்து, தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வை அடையும் வண்ணம் புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு கட்சி தலைமைப்பீடம் ஆதரவை வழங்கும். எமது தலமை சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். அது தொடர்பில் அவசரமாக எதுவும் கூற முடியாது என்ற கருத்தை முதல்வர் பதிவு செய்தார்.

இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், அதனைத் தொடர்ந்து வடமாகாணசபைத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது சற்று தளம்பல் நிலைக்குச் சென்றதன் காரணம் என்ன என வினவினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் 2010, 2015 தேர்தல்கள் நடைபெற்ற தேர்தல்களையும், பிண்ணனியையும் விளக்கியதுடன், முதலாவது மாகாணசபையினால் செய்து முடிப்பதாக குறிப்பிடப்பட்ட அழிந்துபோன தேசத்தை மீள கட்டியெழுப்புதல், மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளையும், தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பையும் வழங்க முடியாது மாகாணசபை திசை மாறிப் பயணித்தமையினையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் – மாகாணசபையின் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியும், இவ்வாறான காரணங்கள் ஒட்டு மொத்தமாக எமது இலக்குகளை அடைய முடியாது போனமை வேதனைக்குரியது.

தொழில் முயற்சிகளை உருவாக்காமை உள்ளிட்ட காரணங்களினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகள் சிறு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், நீண்ட காலத்திற்கு பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணங்களே கட்சி செல்வாக்குகளின்றி நபர்களின் செல்வாக்கு இத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையும் இப்பின்னடைவுக்கு காரணங்களாக அமைந்திருக்கின்றது எனவே இத் தேர்தல் முறைமையை வைத்து பொதுவாக கட்சியாக இருந்தாலும் கட்சியின் செல்வாக்குகளை மதிப்பிட முடியாது என்ற விடயத்தை முதல்வர் விளக்கினார்.

விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பிலும், அதன் ஆரம்பம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் வினவியதற்கு, விரிவான விளக்கம் ஒன்றை வழங்கியதுடன், யாழ்ப்பாணக் கோட்டை தொடர்பிலும், அதன் அபிவிருத்திகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை எமது கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் அண்மையில் பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தான் பிரஸ்தாபித்த விடயங்கள் தொடர்பிலும் அது தொடர்பான விரிவான முன்மொழிவு இன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.

பல்வேறு அழிவுகளுக்கு பின்னர் ஜேர்மன் நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் இதன் போது விரிவாக விளக்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

முறையான மாநகர திண்மக் கழிவகற்றலில் உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் முதல்வர் கருத்து வெளியிட்டிருந்த பொழுது அவற்றை ஒழுங்கமைப்பதற்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகக் குறிப்பிட்டு முன்மொழிவு ஒன்றைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.