நவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்-தேசப்பிரிய

224 0

எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இறுதி முடிவு தொடர்பான அறிவிப்பு இம் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளியிடப்படும் என்றும் கூறினார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் செயலாளர்கள், கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று  இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அகில இலங்கை மக்கள் காங்கரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்னசிங்க, தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மைல்வாகணம் திலகராஜ் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், தேர்தல் பிரசாரங்கள் குறிப்பாக இனவாதமாக பிரசாரங்களை முன்னெடுக்காமை, மைதானங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தல், பாதாதைகள் வைத்தல், விஷேடமாக பொலித்தீன் பாவனையற்ற தேர்தலாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும் என்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் குறித்து இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.