சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழில் திறப்பு

39 0

பிரித்தானிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பிரித்தானிய தூதுவராலயமும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து நாடுமுழுவதும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் திட்டத்தை  முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கான அவதான பெயர்ப்பலகை திறப்பு விழா இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த அவதான பலகையில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக உடனடியாக சுற்றுலா பொலிஸாருக்கு அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரித்தானிய தூதுவர் ஆலயத்தின் அதிகாரிகள், சுற்றுலா பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக வடக்கு பகுதிகளில் அண்மைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பணப்பொதிகள் மற்றும் அவர்களுடைய ஆவணங்கள் களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.