முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது – விஜயபிரபாகரன்

249 0

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். அவருடன் மாவட்ட செயலாளர் பாலு, பழனி நகர செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், விஜயகாந்த் பூரணநலம் பெற வேண்டி பழனி முருகன் கோவிலுக்கு வந்து தங்கரதம் இழுத்து வழிபட்டோம். எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தே.மு.தி.க. தயாராக உள்ளது.

விஜயபிரபாகரன் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட காட்சி.

தமிழகத்தின் நன்மைக்காக முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்று குறித்து வதந்தி பரப்பப்படுகிறது என்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்புகையில், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.