தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது – 1700 பேருக்கு தீவிர சிகிச்சை

352 0

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறையினர் இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி 1700 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்துக்கு முன்பு டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி கூட்டம் அலைமோதுகிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுகாதாரத்துறையினர் இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி 1700 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.

இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெங்கு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைள் குறித்த ஆய்வு கூட்டத்தை சென்னையில் நேற்று நடத்தினார்கள். இதில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வடசென்னை, தர்மபுரி உள்பட சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி சிலருக்கு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவர்களது உடல்நிலை தேறி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தபோது லண்டனில் தனியார் சுகாதார நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி கொசு ஒழிப்பில் உள்ள நவீன நடைமுறைகள், தொழில்நுட்பத்தை இங்கு செயல்படுத்த உள்ளோம்.

மழைக்காலம் தொடங்குவதையொட்டி, டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் உள்ளாட்சி, சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,522 ஊராட்சிகளில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் டெங்கு, தொற்று நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9,881 கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளால் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு 0.2 இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை சுகாதாரத்துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

சென்னை உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொசுக்கள் உருவாகும் வகையில் கட்டடங்களை பராமரிப்பின்றி வைத்திருந்தவர்களுக்கு இதுவரை ரூ. 16 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டார பகுதியை கொசுக்கள் உருவாகாத வகையில் பராமரிப்பதுடன், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒன்றியம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 385 ஒன்றியங்களுக்கு தனித்தனி குழுக்களும் 42 சுகாதார மாவட்டங்களுக்கு மாவட்டத்திற்கு ஒன்று வீதம் விரைவு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தற்போது பெய்து வரும் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் மலேரியா, டைபாய்டு, டெங்கு, எலி காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடுகளில் காலிமனைகளில் பயன்படுத்தப்படாத பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டை, பெயின்ட் வாளி உள்ளிட்ட மழை நீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் ஆகஸ்டு வரையில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 1800, இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும். கடந்த வருடம் மொத்தம் 4800 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது டெங்கு கட்டுக்குள் இருக்கிறது.

ஆனாலும் முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை ஊழியர்களுடன் இணைந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.