மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்?

144 0

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது.

 

சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன.

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கமோ, மேற்கத்தைய நாடுகளின் தலைமையில் செற்பட்ட சர்வதேச சமூகத்தினரிடம்  இது தொடர்பில் முரண்பட்டிருந்ததால், அது இது தொடர்பில் பாதகமான நிலைமை காணப்பட்டது.

 

2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் அதற்கு  முந்தைய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பில் காட்டிய பகைமை உணர்விலிருந்து முற்றாக மாறுபட்ட நிலைப்பாட்டினை முன்னெடுத்தது.

அது மாத்திரமல்லாது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை, யுத்தத்திற்குப்  பின்னர் இலங்கையில் ஏற்பட வேண்டிய நிலை மாற்றத்திற்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் என்பனவற்றிக்காகக் கொண்டு வந்த தீர்மானம் 30/1 இனை நிறைவேற்ற இணை அனுசரணை வழங்கவும் முன்வந்தது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் மேற்கத்தைய நாடுகளிடம் பெறக்கூடிய பொருளாதார உதவிகள் தொடர்பில், கொண்டிருந்த மேலதிகமான நம்பிக்கை உணர்வுடன், இலங்கையின் பௌதிக நிலத்தோற்றத்தில் நிலைமாற்றத்தினை செய்யும் சீன நாட்டின் முதலீடுகள் தொடர்பில் ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

சீனாவினுடனான திட்டங்கள் தற்போதைய காலகட்டத்தில் இலங்கைக்குப் பொருளாதார ரீதியில் பொருத்தமற்றது என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டு அவற்றை ஏறத்தாழ ஒரு வருடகாலம் செயற்படாது அரசாங்கம் தடுத்தே வைத்திருந்தது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் துறைமுக நகரம் (போர்ட் சிட்டி)   அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டங்கள் ஆகியனவே இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இவை இரண்டுமே எதிர்மறை செலவுகளையும், புவிசார்பரசியல் சிக்கல்களையும் இலங்கை மேல் சுமத்துவனவாகக் காணப்பட்டன.

எவ்வாறாயினும் எதிர்பார்த்த வகையில் மேற்கத்தைய நாடுகளிடமிருந்து பொருளாதார வளங்கள் வரத்தவறியதால் சீனாவுடனான திட்டங்களைத் தொடருவதும் அவற்றை செயற்பட தாமதித்ததனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்குவதும் தவிர்க்க முடியாத விளைவுகளாயின.

மேற்கத்தைய பொருளாதார உதவிகள் எதிர்பார்த்த அளவில் வந்து சேராமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

அதாவது இலங்கை தன்னை மத்திய வருமான நாடாக இனங்காட்டிக்கொண்டு வருவதால், அது மத்திய வருமான மட்டங்களின் கீழ் மட்டத்தில் இருந்த போதிலும் அதற்கு சலுகைகளின் அடிப்படையில் உதவிகளைப்பெற தகுதியற்றதாகிப் போய்விட்டது. இதற்கு முற்றிலும் பொருளாதார காரணியின் அடிப்படை மட்டுமே காரணமாகும்.

அடுத்ததாக மேற்கத்தைய நாடுகளின் அரசாங்கங்கள் பெரிய அளவிலான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் தாமாக ஈடுபடாது அவற்றை தனியார் துறையினரிடமே விட்டு விடுகின்றன.

இலங்கையில் நிலவும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தனியாரது சொத்துரிமைச் சட்டங்கள் வியாபாரங்களில் முதலீடு செய்பவர்களைப் பொறுத்தமட்டில் நேர்மறையாக இல்லாதிருப்பது, நாட்டிற்கு தொடர்ந்தும் பெரும் இடையூறாக உள்ளன. வெளிநாட்டு முதலீடுகளுக்காகப் போட்டியிடும் வியட்நாம் போன்ற நாடுகளில் நிலவும் இவை தொடர்பான முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சட்டங்கள் முதலீட்டாளர்களைக் ஈர்க்கும் வகையில் உள்ளன.

வாட்டமுற்றுள்ள பொருளாதாரம்

இலங்கையில் தேர்தல்கள் மிக விரைவில் இடம்பெற உள்ள இன்றைய கால கட்டத்தில் தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது என்னும் வலிமையான விமர்சனங்களும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ளன.

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னரும் கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சி  மெதுவான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது.

இப்போதோ, குறிப்பாக உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் பொருளாதாரம் மேலும் கூடிய தாக்கங்களுக்கு உள்ளாகி, கடந்த நான்கு மாதங்களாக உதாரணமாக சுற்றுலாத் தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி விட்டது.

கடந்த சில வாரங்களாக சுற்றுலாக்காரர்களின் வருகை சிறியளவில் அதிகரித்து வந்தபோதிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் ஸ்திரமற்ற நிலைவரம் குறித்து பெரிதும் எச்சரிக்கை உணர்வுடனேயே செயற்பட்டு வருகின்றனர்.

அடுத்து வரவுள்ள தேர்தல்கள்  காலங்கள் இந்த உறுதியின்மை நிலைவரத்துடன் சேர்ந்து அபிப்பிராயங்களை இன்னும் மோசமாக்குவதாக உள்ளன.

இத்தகைய வாட்டமுற்ற பொருளாதாரப் பின்னணியில் பொருளாதார அபிவிருத்தி தேவைகளுக்கான வளங்கள் பற்றாக்குறையாக அல்லது கிடைக்காது இருக்கின்ற வேளையில் ஐக்கிய அமெரிக்கா வழங்கிய 480 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை அரசாங்கம் தவறவிட்டுள்ளமை அதன் பலவீனத்தையே காட்டுகின்றது.

இக்குறிப்பிட்ட மானியத்தொகை (கிராண்ட்) போக்குவரத்து மற்றும் நிலம் தொடர்பான நிருவாகம் ஆகிய துறைகளை கணிசமாகத் தரமுயர்த்துவதற்கானதாகும்.

துரதிஸ்டவசமாக, புத்தாயிரமாண்டுச் சவால்களுக்கான கூட்டுரிமைக் குழு (MCC) நிதியுதவியானது ஐக்கிய அமெரிக்காவுடனான இரண்டு இராணுவ உடன்படிக்கைகள் உள்ளடங்கிய பொதியுடன் மேற்கூறிய தேவைகளுக்கான மானியம் பற்றிய உடன்படிக்கையும் இணைந்துள்ளது.

இராணுவ உடன்படிக்கைகள் இரண்டு. அவற்றில் ஒன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்காக அமையும் சேவைகள் உடன்படிக்கையாகும்.

இவற்றை ஏசிஎஸ்ஏ (ACSA) என்றும் இரண்டாவதனை படைகளின் படிநிலை (SOFA) உடன்படிக்கை என்றும் அழைக்கப்படும். இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்கா இலங்கையை அணுகக் கூடியமை தொடர்பான உடன்படிக்கைகளாகும்.

இவ்விரண்டு இராணுவ உடன்படிக்கைகளும் இலங்கையுடன் மாத்திரமானதல்ல. ஐக்கிய அமெரிக்கா இதுபோன்ற உடன்படிக்கைகளை உலகில் இன்னும் 100 நாடுகளுடன் எழுதியுள்ளது. சரியாக கூறுவதானால் 1995ஆம் ஆண்டு முதலாக இலங்கையில் ஆட்புல எல்லைக்குள் நுழைய ஐ.அமெரிக்கா அனுமதி பெற்றிருந்தது.

இதனை ஒத்த உடன்படிக்கை இன்னொன்றை இலங்கையின் முன்னைய அரசாங்கங்களுடன் 2007ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா எழுதியிருந்தது.

மிக அண்மைக்கால உடன்படிக்கைகளே பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அது கூடிய பகுதிகளுக்குச் சென்றுவர அனுமதிக்கக் கூடியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசியல் மேடைகளில் விவாதிக்கப்பட்டும் வருகிறது.

இவ்வாறான பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகளை விஸ்தரித்தல் தொடர்பான நோக்கங்கள் பற்றி தேசிய பாதுகாப்பு கரிசனங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

மறுபுறத்தில் பார்க்கும் போது, புத்தாயிரமாண்டுச் சவால்களுக்கான கூட்டுரிமைக் குழு (எம்சிசி) மானிய உதவிக் தொகையானது பொருளாதார தேவைகள் தொடர்பானதாகும்.

அந்த உதவித் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியமை நாட்டிற்கு பெரும் பொருளாதார இழப்பாகும். அது நாட்டின் போக்குவரத்து வசதி முறைகளையும் நிலத்தின் பதிவு செய்தல் முறைகளையும் மேம்படுத்தல் தொடர்பானதாகும்.

போக்குவரத்து திட்டத்தின் கீழ் பௌதிக வீதி வழி வலைப்பின்னல்களை தரமுயர்த்துதல் மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் போக்குவரத்து முறைகளை நவீன மயப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படலாம்.

இம்முதலீடுகள் கடுமையான போக்குவரத்துத் தடைகளை குறைப்பதுடன் பாதுகாப்பானதும் கூடியளவு நிச்சயத்தன்மை கொண்டதான பொதுப் போக்குவரத்தினை விருத்தி செய்யவும் உதவுவதுடன் மக்களையும் பொருட்களையும் சந்தைகளுடன் இணைக்கத் தேவையான குறைந்த செலவுடனான போக்குவரத்தினையும்  வழங்க முடியும்.

சோடிக்கப்பட்ட செய்தி

நிலம் தொடர்பில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விளக்க விவரப்பட்டியல் (இன்வென்றி ) தயாரித்தல், நிலங்களின் பெறுமதியை மதிப்பிட நவீன முறைகளை கொண்டு வருதல், சிறிய உடமையாளர்கள், பெண்கள் நிறுவனங்கள் என்பவர்களது நிலவுடமைகளுக்கு டிஜிடல் ( Digital) தொழில்நுட்பம் வழியாக உறுதிப்பத்திரங்களை பேண வழிசெய்வதன் மூலம் அழிவுறுதல் (Damage) திருட்டு, இழப்பு என்பவற்றிலிருந்து பத்திரங்களைப் பாதுகாக்க முடியும்.

ஐக்கிய அமெரிக்க படைகள் இலங்கையை ஒரு விநியோகத்திற்கான முக்கியமான மையமாக்குதல் அல்லது இலங்கைக்குள் அமெரிக்கப் படையினர் விசா இல்லாமல் நுழைதல் என்வற்றுடன் இது எதுவித தொடர்பும் இல்லை.

இவற்றை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என்றால் (ஏசிஎஸ்ஏ) (எஸ்ஓஎப்ஏ) இரண்டு உடன்படிக்கைகளுக்கும் கையெழுத்திட மறுக்க முடியும்.

புத்தாயிரமாண்டுச் சவால்கள் கூட்டுரிமைக் குழு (mcc) உடன்படிக்கை மேற்படி இரண்டு இராணுவம் தொடர்பான உடன்படிக்கைகளை கையெழுத்திட்டால் மட்டுமே வர போகும் ஒன்றல்ல. அவை வேறு இது வேறு.

இராணுவ உடன்படிக்கைகளை ஏற்பது அல்லது விஸ்தரித்தலோடு தொடர்பானது அல்ல.

மேற்படி புத்தாயிரமாண்டுச் சவால்களுக்கான கூட்டுரிமைக் குழு (mcc) மானிய உதவித்தொகை தொடர்பில் கணிசமான அளவுக்கு சோடிக்கப்பட்ட செய்திகள் பரப்பப்படுகின்றன.

அக்கதைகள் திருகோணமலையிலிருந்து  கொழும்பிற்கு ஒரு மின்சார புகையிரத வழி ஏற்படுத்தப்படும் என்றும் அதன் வழியாக ஒரு திறமை மிக்க பொருளாதார இடைவெளி நிலம் (Economic Corridor) ஏற்படுத்தப்படும் என்றும் அது நாட்டை இரண்டாக பிரித்து வட பகுதி தென்பகுதியென பிளவுபடுத்தி வட பகுதியை ஐக்கிய அமெரிக்கா கையேற்று நடாத்தும் என்றும் கூறப்படுகிறது.

இத்திட்டம் (எம்சிசி) தயாரிக்கப்படுவதற்கு முன்பே தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், புகையிரத வீதிகள் மற்றும் விரைவு வீதிகளை உள்ளடங்கிய தேசப்படத்தை தயாரிப்பதனை வைத்துக்கொண்டுதான் இப்புதிய மின்சார ரயில் கட்டுக்கதை சில தரப்பினரால் புனையப்பட்டுள்ளது.

இந்த தேசப்படத்திற்கும் அரசாங்கம் தயாரித்துள்ள புத்தாயிரமாண்டுச் சவால்களுக்கான கூட்டுரிமைக் குழு (MCC) வுக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை.

இதில்  இன்னுமொரு மிகைப்படுத்தப்பட்ட கதையும் உண்டு. அதாவது நிலப்பதிவு முறை மேம்படுத்தப்பட்டால் வறுமையான பண்ணையாளர்கள் தமது நிலங்களை பன்னாட்டு கூட்டுத்தாபனங்களிடம் விலைக்கு விற்று விடலாம் என்பதாகும்.

இதனால் மக்கள் சுரண்டலுக்கு ஆளாகி அது இலங்கையின் தேசிய நலன்களைப் பாதிக்கலாம் என்றும் ஒரு புனைகதைக்கு இன்னும் ஒரு உப புனைகதை இயற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இந்த எம்சிசி மானிய உதவிக்கு ஜனாதிபதி தேர்தல் முடியும் மட்டும் கையெழுத்திடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

இந்தப் பொறுப்பை அடுத்து வரும் ஜனாதிபதிக்கு மாற்றுதல் காரணமாக உதவித்தொகை காலாவதியானால் அது நாட்டுக்கு நஷ்டமாகி விடலாம்.

இதற்குக் காரணம் இலங்கை தொடர்ந்தும் கீழ் மத்திய வருமான நாடாக இல்லாது உயர் மத்திய வருமான நாடாகி விட்டதனாலாகும்.

(ஐ.அமெரிக்க டொலர் 3900 தலா வருமானம் அந்த வகைப்பாட்டிற்கு இலங்கையை  தள்ளிவிடும்) உயர் மத்திய வருமான நாடுகள் MCC எம்சிசி மானிய உதவிகளைப் பெற தகுதியற்றதாக்கப்படும்.

மானியத் தொகையை பெறுவதற்கான இறுதி திகதிக்கு முன்பதாக இலங்கை கையெழுத்திடாத பட்சத்தில் இலங்கை அபிவிருத்திக்காகப் பெறக்கூடிய  480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைக்காது போய்விடும்.

எம்சிசி தரவுத்தளத்தின் படி இதுவரையில் உலகில் 29 நாடுகள் இவ்வகையான 37 உதவிகளைப் பெற்று விட்டன. இவ்வாறான உதவியை கோரிய எந்த ஒரு நாடும் எங்களுக்கு இது தேவையற்றது என இதுவரை மறுக்கவில்லை. அவ்வாறு மறுப்பதில் இலங்கையே முதலாவதாக இருக்கும். அது ஒரு தவறான முடிவை எடுப்பதன் மூலமாக.

(கலாநிதி ஜெஹான் பெரேரா எழுதிய கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ். மூக்கையாவினால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)