வேட்பாளராக யார் களமிறங்கினாலும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் – ருவான்

379 0

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்கினாலும், அவருக்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசியக்கட்சி என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் யாரை, வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று கோருகிறார்களோ அவரை அறிவிப்போம்.

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் நாம் எமது தரப்பின் வேட்பாளரை அறிவிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளையும் நாம் தற்போது செய்து வருகிறோம்.

அமைச்சர் சஜித் பிரேதமதாஸ, எமது கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நாம் அவருக்காக 100 வீதம் உழைக்கத் தயாராகவே இருக்கிறோம்.

அதேபோல், கருஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக அறிவித்தால்கூட நாம் அவருக்காக உழைக்க த் தயாராகவே இருக்கிறோம்.

கட்சி சார்பாக யார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் நாம் அவருக்கான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார்’ எனத் தெரிவித்துள்ளார்.