எல்பிட்டிய – அளுத்கம பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பயணியொருவர் மீது, மற்றுமொரு பயணி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை, இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அளுத்கமயிலிருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பஸ், அட்டகோட்டே பகுதியில் பயணிக்கும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழக்கொன்றில் முன்னிலையாவதற்காக, தனது மனைவியுடன், எல்பிட்டிய நீதிமன்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இங்குருகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஜயவர்தன என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், பஸ்ஸிலிருந்து அவசரமாக இறங்கி, அவருக்காகக் காத்திருந்த மோட்டார் சைக்கிளொன்றில் ஏறி, தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவித்த எல்பிட்டிய பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

