அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கையை ஆராய சிங்கப்பூர் தீர்மானம்

362 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கை மற்றும் எழுத்து ஆவணங்கள் கிடைக்க பெற்றவுடன் அது தொடர்பில் ஆராயப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி த ஸ்ரேட் டைம்ஸ் செய்தி தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் அது தொடர்பான தகவல் மற்றும் எழுத்து ஆவணங்கள் கோரப்பட்ட போதும் இதுவரை அவை கிடைக்க பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பான எழுத்து ஆவணங்கள் கிடைக்க பெற்றவுடன் சிங்கப்பூர் சட்டத்திட்டத்திற்கமைய அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராயப்படும் என அந்த அமைச்சு குறிபிபிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அவர் தொடர்பான தகவல்களை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிப்பதற்காகன 21 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை சட்டமா அதிபர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.