2018 ஒக்டோபர் அரசியல் நெருக்கடி , ஏப்ரல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளில் 5 மாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த வீதி பணிகளை அடுத்த வருடம் மார்ச் மாதமாகும் போது நிறைவு செய்ய முடியும்.
என்று நம்புவதாகவும் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்கென்று ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இதுவரையில் 170 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இள்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
கடந்த வருடத்தின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிநிலைமை மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் காரணமாக மத்திய அதிவேக நெடுங்சாலை அபிவிருத்தி பணிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதன் காரணமாக இந்த அபிவிருத்தி பணிகள் 5 மாத காலம் தடைப்பட்டிருந்தது. இந்த காலதாமதம் இடம்பெற்றிருக்கா விட்டால் இந்த நவம்பர் மாதம் ஆகும் போது அந்த அதிவேக நெடுஞ்சாலைகளை மக்களின் பாவனைக்கு கையளித்திருக்க முடியும்.
ஆகவே அந்த பணிகளை அடுத்த வருடம் மார்ச் மாதமாகும் போது நிறைவுச்செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

