அமேசான் காட்டுத்தீ: அமெரிக்காவின் உதவியை நாடிய பிரேசில்

411 0

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவுவதாக கூறும்போது நிராகரித்த பிரேசில் நாடு, தற்போது அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதையடுத்து சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டில், ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என அறிவித்தனர்.
அமேசான் காட்டுத்தீ

இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்தது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தது.

இந்நிலையில் அமேசான் காடுகளில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது பிரேசில். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரேசில் அதிபர் போல்சனரோ, தனது மகன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோரை வாஷிங்டன் அனுப்பினார்.
இதனையடுத்து பிரேசில் அதிபர் போல்சனரோவின் மகன் ஜெய்ர் போல்சனரோ மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டிரம்பை நேற்று சந்தித்தனர்.

அமேசான் காட்டுத்தீயை அணைக்க பிரேசில் அரசின் முயற்சி சிறப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை சுட்டிக்காட்டிய போல்சனரோ, தற்போது அமெரிக்க அரசின் உதவியை கேட்டிருப்பதாக கூறியுள்ளார்.