தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்!

461 0

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவது என்றால் என்ன?

தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படையில் மேற்படி மூன்று தரப்புக்களிடமும் என்ன உண்டு பார்க்கலாம்.

அதற்கு முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கான அடிப்படை நிபந்தனை எதுவென்று பார்க்கலாம். அதாவது சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் கூர்முனையை மழுங்க செய்ய வேண்டும். அல்லது ஒரு தீர்வை நோக்கி அதைக் கனிய வைக்க வேண்டும். அல்லது வளைக்க வேண்டும். இதன்படி பார்த்தால் பெருந் தேசியவாதத்தை ஒன்றில் தோற்கடிக்க வேண்டும். அல்லது அதைக் கனிய வைக்க வேண்டும்.அவ்வாறு பெருந் தேசியவாதத்தை கனிய வைக்கத் தக்க வேட்பாளர்கள் யாராவது மேற்படி மூன்று தரப்புகளில் உண்டா?
இல்லை. இதைச் சற்று விரிவாக பார்க்கலாம்.

ராஜபக்ச அணி ஒப்பீட்டளவில் வெளிப்படையாக காணப்படுகிறது. சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின் இனவாதக் கூர்முனையின் ஆகப் பிந்திய வளர்ச்சியாகிய யுத்த வெற்றி வாதத்திற்கு அந்த அணி தலைமை தாங்குகிறது.யுத்த வெற்றி வாதம் எனப்படுவது யுத்தத்தில் வெற்றி பெற்ற தரப்பை தொடர்ந்தும் வெற்றி பெற்ற தரப்பாகவே பேணுவது. இதை மறு வளமாக சொன்னால் தோல்வியுற்ற தரப்பைத் தொடர்ந்தும் தோல்வியுற்ற தப்பாகவே பேணுவது. எனவே இதில் தோல்வியுற்ற தரப்புக்கு வெற்றியாகக் கருதத்தக்க எந்த ஒரு தீர்வும் வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ச சகோதரர்கள் தெளிவாக கூறுகிறார்கள் அபிவிருத்தி தான் ஒரே தீர்வு என்று. முஸ்லீம் அரசியல்வாதிகளைப் போல தமிழ் மக்களும் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாறவேண்டும் என்று கோத்தபாய கூறுகிறார். அரசியல் தீர்வு விவகாரத்தை தனது தமையன் பார்த்துக்கொள்வார் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணிக்குள் இருந்து வரும் செய்திகளைத் தொகுக்கும் போது பதின்மூன்றாவது திருத்தத்தை அவர்கள் தாண்ட மாட்டார்கள் என்று தெரிகிறது.

இரண்டாவது தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தரப்பு கூட்டமைப்போடு சேர்ந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. புதிய யாப்பினுள் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அத் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்கலாம் எற்காமல் விடலாம். எனினும் ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டுமென்று இத்தரப்பு சிந்தித்தது. அதன் யாப்புருவாக்க முயற்சிகள் விசுவாசமாக மேற்கொள்ளப்படாதவைகளாக இருக்கலாம். எனினும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கான ஏதோ ஒரு முயற்சியை மேற்கொண்ட ஒரு தரப்பாக இத்தரப்பு காணப்படுகிறது.

மூன்றாவது தரப்பு ஜேவிபி. இவர்களிடம் தீர்வு இல்லை. கடந்த வாரம் காலிமுகத்திடலில் லட்சக்கணக்கானவர்களை கூட்ட முடிந்த ஒரு கட்சியிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவும் இருக்கவில்லை. அக்கட்சியின் வேட்பாளராகிய அனுர குமார திசாநாயக்க தனது உரையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாகவே வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அவர் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. ராஜபக்சக்கள் கூறுவதைப் போலவே இத்தரப்பும் பாதுகாப்பைப் பற்றியும் அபிவிருதியைப் பற்றியுமே பேசுகிறது.

மேற்கண்ட மூன்று தரப்புகளின் நிலைப்பாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் மூன்று தரப்புமே இனவாதத்தை செங்குத்தாக எதிர்க்கத் தயாரில்லை. இனவாத்தோடு மோதத் தயாரில்லை. ஒரு தரப்பு இனவாதத்தின் பிந்திய வளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறது. இன்னொரு தரப்பு இனவாதத்தோடு கள்ளப்பெண்டாட்டி உறவைப் பேணுகிறது. இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாக கூறாமல் விடுவதன் மூலம் அது இனவாதத்தைப் பகைத்துக் கொள்ளத் தயாரில்லை. ஒப்பீட்டளவில் ரணிலின் தரப்பு இனவாதத்தோடு ஏதோ ஒரு சுதாகரிப்பை செய்து கொண்டு ஒரு தீர்வைப் பெற்றுவிட முயற்சிக்கிறது. ஆனால் அப்படி ஒரு தீர்வைப் பெறுவதற்காக தமிழ் மக்களோடு வெளிப்படையாக ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள அந்தத் தரப்பும் தயாரில்லை.

2009 இற்குப் பின் வந்த ஜனாதிபதித் தேர்தல்கள் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை. இப்பொழுதும் இதுதான் நிலைமை. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் பொருட்டு தமிழத் தரப்போடு உடன்படிக்கை செய்ய முடியாத ஒரு நிலை. அப்படி ஓர் உடன்படிக்கையை எந்தத் தரப்பு செய்கிறதோ அது இனவாத வாக்குகளை கூடியபட்சம் பெற முடியாது என்ற நிலை.

இப்படிப்பட்ட ஓர் அரசியர் சூழலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கலாம? யாரை முழுமையாக நம்பலாம்?

யாரையும் முழுமையாக நம்ப முடியாது. காதலிக்கவும் முடியாது. கையாளக்கூடிய தரப்புக்களைக் கையாளளாம். இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டு என்று ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வை முன்வைப்பதற்காக இனவாதத்த்தோடு வெளிப்படையாக பேசவும் வெளிப்படையாக முரண்படவும் தயாராக உள்ள ஒரு தரப்புதான் தமிழ் மக்களுக்கு உண்மையான நட்பு சக்தி. ஆனால் அப்படிப்பட்ட நட்பு சக்திகள் தென்னிலங்கையில் மிகச்சிலவே உண்டு. அவை பலமற்றவை. சிங்கள மக்கள் மத்தியில் பெருந்திரள் வெகுசன அரசியலை முன்னெடுக்க முடியாதவை. பெருமளவிற்கு நீதியின் பாற்பட்ட இலட்சியவாதச் செயற்பாட்டு அமைப்புக்களே அவை.

எனவே ஒரு தீர்வுக்காக பொதுசன அபிப்பிராயத்தைக் கனிய வைப்பது என்று சொன்னால் அதற்கு வெகுஜனத் தளத்தைக் கொண்ட பெரிய கட்சிகளால்தான் முடியும். ஆனால் சிங்கள வெகு சனத்தின் ஆதரவைப் பெற விழையும் எந்த ஒரு பெரிய கட்சியும் இனவாதத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் பகைக்கத் தயாராக இருக்காது. இப்படிப் பார்த்தால் தமிழ்த் தரப்பானது எழுதப்படாத உடன்படிக்கையின் அடிப்படையில் ஏதாவது ஒரு தரப்போடு தந்திரோபாய உறவைத்தான் வைத்துக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத்தமிழர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் தெரிவுகள் உண்டு.

நிச்சயமாக இத் தெரிவுகளுக்குள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற தெரிவு வராது. ஏனெனில் தமது பேரத்தை தக்க வைக்கவும் தமது மக்கள் ஆணையை வெளிப்படுத்தவும். சிங்கள அரசியல்வாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் தனது தரப்பு நியாயத்தை கூர்மையாக வெளிப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு இப்போது உள்ள ஒரே பிரயோக வழி தேர்தல் வழிமுறைதான். ஏனெனில் தமிழ் மக்களிடம் அதற்கு வெளியே வெகுசன அரசியலை முன்னெடுக்கவல்ல மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது.

ஆனால் தமிழ் மக்கள் தமது பேர அரசியலை முன்னெடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. யுத்த வெற்றி வாதமானது தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை தொடர்ந்தும் தோல்வியுற்ற நிலையிலேயே பேண முயற்சிக்கும். ஆனால் 2009 க்குப் பின்னரான இந்தோ பசிபிக் பிராந்திய இழுவிசைகளின்படி தமிழ் மக்களுக்குப் பேரம் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் பேரத்தைச் சிறப்பாகக் கையாண்டு அரசியல் வலுச் சமநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற வேண்டிய தேவை கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே அவ்வாறு கிடைத்திருக்கும் பேரத்தை கையாண்டு வலுச் சமநிலையை மாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். அதில் தேர்தல் ஒரு முக்கிய வாய்ப்பு. எனவே தேர்தலைப் புறக்கணித்தல் என்ற தெரிவுக்கு இடமில்லை. இதன்படி தமிழ் மக்களுக்கு பின்வரும் தெரிவுகள் உண்டு.

முதலாவது தெரிவு – ஏற்கனவே ஒரு தீர்வு முயற்சியில் ஈடுபட்ட தரப்போடு இணைந்து எதிர்த்தரப்பைத் தோற்கடித்து தீர்வு முயற்சிகளை தடையின்றி முன்னெடுப்பது.
இரண்டாவது தெரிவு – ஒரு தமிழ் வேட்ப்பாளரை முன்னிறுத்தி இரண்டு பிரதான வேட்ப்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்களைக் குழப்புவது.
மூன்றாவது தெரிவு – ஜெ.வி.பிக்குமுதலாவது விருப்பத் தெரிவு வாக்கையளிப்பது. இரண்டாவது விருப்பு வாக்கை பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வழங்குவது.

இதில் முதலாவது தெரிவைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பு தெரிந்தெடுத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. கிடைத்ததெல்லாம் கம்பெரலியதான். அதாவது ரணில் ஒப்பீட்டளவில் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்கிறார். அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக எதையோ முயற்சித்திருக்கிறார். ஆனால் தீர்வு முயற்சிகள் யாவும் முடிவில் தேங்கிப் போய் விட்டன. அதன் விளைவாக தீர்வு பற்றி பேசுவதை விட்டு விட்டு ரணிலும் கூட்டமைப்பும் கம்பெரலிய பற்றி பேசி வருகின்றன. அதாவது பிரயோகத்தில் ரணிலும் அபிவிருத்தி அரசியலைதான் முன்னெடுக்கிறார். ராஜபக்ச கூறுவதைப் போல, ஜே.வி.பி கூறுவதைப் போல.

இரண்டாவது தெரிவு – மு.திருநாவுக்கரசு முன்வைத்தது. தமிழ் மக்கள் திட்டமிட்டுச் செயற்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மேலௌ முடியும் என்று மு.திருநாவுக்கரசு கடந்த பத்து ஆண்டுகளாக கூறிவருகிறார். 2010இல் அவர் “பொங்கு தமிழ்”. இணையத்தளத்தில் வேறு பெயரில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதே விடயத்தை 2015ம் அதே இணையதளத்தில் சிறிய மாற்றங்களோடு எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதியதை முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் யாருமே பொருட்படுத்தவில்லை. மாறாக 2010இல் தமிழ் தலைவர்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள். 2015 மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்தார்கள். இப்பொழுது யாரை ஆதரிக்க போகிறார்கள்?

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழலாம் என்பதைக் குறித்து திருநாவுக்கரசு கூறியதை பார்க்கலாம். தமிழ் மக்கள் ஒரு பொதுத் தமிழ் வேட்ப்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும். எல்லாத் தமிழ் வாக்குகளும் அந்த வேட்பாளருக்கு விழும்போது இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது கடினமாகும். அதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்கு போக வேண்டியிருக்கும். கணக்கெடுப்பில் தமிழ் மக்கள் யாரை இரண்டாவது விருப்பத் தெரிவாக தெரிந்தெடுக்கிறார்களோ அந்த சிங்கள வேட்பாளரே ஜனாதிபதியாக வருவார். இதுதான் திருநாவுக்கரசுவின் கணக்கு. ஆனால் கூட்டமைப்பைச் சேர்ந்த யாருமே இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை.

மூன்றாவது தெரிவு கிட்டத்தட்ட திருநாவுக்கரசு கூறும் தெரிவுக்கு நெருக்கமாக வரும் மற்றொரு தெரிவாகும். யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரான குமாரவடிவேல் குருபரன் இது தொடர்பில் என்னோடு உரையாடினார். முகநூலிலும் எழுதியுள்ளார். அதன்படி தமிழ் மக்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நிராகரித்து தமது முதலாவது விருப்பத் தெரிவை ஜேவிபிக்கு வழங்கினால் என்ன நடக்கும்? இதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியை உலகத்திற்கு உணர்த்தலாம். அதேசமயம் ஜேவிபி வெற்றி பெறப் போவதில்லை. தான் வெல்லப் போவது இல்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் அக்கட்சி களத்தில் இறங்கியிருப்பது ஏன்? ஏனெனில் அவர்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வெற்றிகளையும் குழப்ப நினைக்கிறார்கள். அதேசமயம் தமது கட்சியை ஒரு மூன்றாவது சக்தியாக கட்டியெழுப்ப விழைகிறார்கள்.

எனவே இரண்டு பிரதான கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளாத தென்னிலங்கையின் மூன்றாவது தரப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்களில் தங்கியிருக்கச் செய்யலாம். சிங்கள மக்களுக்கும் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் ஒரு செய்தி உணர்த்தலாம். ஜேவிபிக்கு விழக்கூடிய சிங்கள வாக்குகளோடு தமிழ் வாக்குகளும் கொத்தாகச் சேர்ந்தால் அது அனேகமாக இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றிகளையும் குழப்பக்கூடும். இதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்குப் போக வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்களோடு ஏதோ ஓர் உடன்படிக்கை வரத் தயாரான பிரதான வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கலாம். அதன்மூலம் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தலாம். அவ்வாறு வெற்றிபெறும் வேட்பாளர் தமிழ் மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட்ட வெற்றியைப் பெற்ற ஒருவராக இருப்பார். எனவே அவரோடு ஒரு பலமான பேரத்தை வைத்துக் கொள்ளலாம். இது மூன்றாவது தெரிவு.

இக்கட்டுரையானது இன்று முடிவுகள் எதையும் கூறப்போவதில்லை. மேற்படி தெரிவுகள் குறித்துத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். இவற்றை விட வேறு தெரிவுகளையும் கண்டு பிடிக்கலாம். அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. எனவே, எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் நன்கு ஆராய்ந்து ஒரு தேர்தல் வியூகத்தை வகுக்கலாம். ஜேவிபி இரண்டு பிரதான கட்சிகளையும் குழப்புவது போல தமிழ் மக்களும் தென்னிலங்கையில் இருக்கும் தப்புகளைக் குழப்பலாம். அவற்றை எப்படித் தமிழ் மக்களில் தங்கியிருக்கச் செய்யலாம் என்று சிந்திக்கலாம். அரசியலில் எதிர்த் தரப்பைக் குழப்புவது என்பதும் பேரம் பேசும் உத்திகளில் ஒன்றாகும். இது பேரத்தை உயர்த்துவதோடு வலுச் சமநிலையை தமிழ் மக்களுக்கு சாதகமாகத் திருப்ப உதவும்.

நிலாந்தன்