கோவையில் 5 பேர் வீடுகளில் சோதனை- தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை

341 0

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியின் வீடியோவை பகிர்ந்ததாக கோவையைச் சேர்ந்த 5 பேர் பிடிபட்டுள்ளதும், அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜக்ரன்ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், அகரம் ஜிந்தா, இதயதுல்லா, அபுபக்கர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த 3 பேர் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என்றும், அவர்கள் அங்கு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில் கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர்.

கோவையிலும் சந்தேகத்தின்பேரில் 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.

ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில் கோவையில் படிப்படியாக பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. முக்கிய இடங்களில் மட்டும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோவை, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் யாராவது ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஜக்ரைன் ஹசீமின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கோவை உக்கடம், கோட்டைமேடு, பிலால் நகர் பகுதிகளை சேர்ந்த உமர்பாரூக், சனாபர் அலி, சமேசா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகிய 5 பேர் சிக்கினர். அவர்களது வீடுகளில் இன்று காலை 5 மணிக்கு புகுந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கொச்சி, கோவையை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.

என்ஐஏ சோதனை நடந்துவரும் உக்கடம் வின்சென்ட் ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சமேசா முபின் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சோதனை 10 மணிக்கு நிறைவு பெற்றது. கொச்சி கூடுதல் கண்காணிப்பாளர் விக்ரம் தலைமையில் நடந்த இந்த சோதனையில் 5 பேரின் வீடுகளில் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 நோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டன. இதில் “ முஸ்லிம்கள் எல்லாம் பயங்கரவாதியா?” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

7 அரபிமொழி புத்தகங்களும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. சோதனையை முடித்துக் கொண்டு கொச்சி என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த ஆவணங்களுடன் கோவையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஜக்ரைன்ஹசீமின் வீடியோவை பரப்பிய குற்றத்துக்காக உமர் பாரூக், சனாபர் அலி, சமேசா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகிய 5 பேரிடமும் மேலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் 5பேரும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஏற்று இவர்கள் என்.ஐ.ஏ. விசாரணைக்காக நாளை கேரளா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மீண்டும் 5 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தப்படுகிறது. இதன் பிறகு கோவை வாலிபர்கள், பயங்கரவாதியின் வீடியோ பகிர்ந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் 5 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக சோதனை நடத்தியுள்ளனர். அது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அப்போது எந்த தடயங்களும் கிடைக்காததால் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் 6 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான தகவல் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவை மக்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாகவே மாறி இருந்தது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் ஒருவித பீதியும் நிலவியது. 2 நாட்களுக்கு முன்னர்தான் போலீஸ் பாதுகாப்பு ஓரளவுக்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியின் வீடியோவை பகிர்ந்ததாக கோவையைச் சேர்ந்த 5 பேர் பிடிபட்டுள்ளதும், அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.