பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வரும் மோடி சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் வழங்க உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு இன்னும் தமிழகம் வரவில்லை.
இந்த நிலையில் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அடுத்த மாதம் 30-ந் தேதி (செப்டம்பர்) தமிழகம் வருகிறார்.
சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி அங்கு பட்டமளிப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்று பட்டங்களை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று செப்டம்பர் மாதம் 30-ந்தேதி பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி. வருவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், அறிஞர்கள் பங்கேற்று பட்டம் பெறுவார்கள் என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவை ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி நடத்த ஐ.ஐ.டி. நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமரால் அந்த தேதியில் வர முடியாததால் பட்டமளிப்பு விழாவை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஒத்தி வைத்தது.
இப்போது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 30-ந்தேதி நடைபெறுவதை உறுதி செய்துள்ளனர்.

