ஊவா மாகாண சபைத் தலைவராக சந்தன வெலிவிட்ட!

207 0

ஊவா மாகாண சபையின் புதிய தலைவராக, சந்தன வெலிவிட்ட இன்று (22) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

நேற்றைய சபை அமர்வின் போது, ஊவா மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், சபையின் தலைவராக அனில் சந்தன வெலிவிட்டவை முன்மொழிந்ததையடுத்து, சபையின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்தத் தெரிவித்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண சபையின் தலைவரும் உப தலைவரும் விடுமுறையில் இருப்பதாகத் தெரிவித்துடன்,  தலைவர் விடுமுறையில் இருக்கும் போது, உப தலைவரே சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் எனினும், இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறையில் இருப்பதால், சபையின் நடவடிக்கைகளை உரிய முறையில் கொண்டு நடத்த முடியாமையால், புதிய தலைவரைத் தெரிவு செய்வற்கான தேவை ஏற்பட்டதாகத்  தெரிவித்தார்.

இதற்கமையவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான அனில் சந்தன வெலிவிட்டவின் பெயர் முன்மொழியப்பட்டு, அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டாரென, செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தமி​ழ்ப் பிரதிநிதிகள் முன்வைத்த பெயரொன்று ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமையானது, ஊவா மாகாண சபையில் தமிழர்களுக்கு இருக்கும் முக்கியதுவத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில், ஊவா மாகாண சபை மட்டுமே தற்போது இயங்கி வருகின்றது. ஏனைய மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.