பாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு!

429 0

காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேட்டியின் போது ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் பாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்தார்.

காஷ்மீர் தொடர்பான விவாதத்தை மேற்கொள்வது குறித்து ஐ.நா. சபையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது.
ஆனால், ரஷியா போன்ற நாடுகள் காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் எனவும் இதை ஐ.நா. சபையில் விவாதிக்க அவசியமில்லை என வாக்களித்தது. இறுதியில், இந்தியாவுக்கு அதிகமான நாடுகள் ஆதரவு அளித்தால் ஐ.நா. சபையில் காஷ்மீர் விவாதத்தை எழுப்ப முயற்சித்த பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதையடுத்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி சையது அக்பருதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தானுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தப் போகிறீர்கள் என அந்நாட்டைச் சேர்ந்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அக்பருதீன், நாங்கள் இப்போதே பேச்சுவார்த்தைக்கு தயாரக உள்ளோம் எனக்கூறி கேள்வி கேட்ட பாகிஸ்தானை சேர்ந்த மூன்று நிருபர்களுடன் கை குலுக்கிக் கொண்டார்.
மேலும் பேசிய அவர், பயங்கரவாதம் ஒருபுறம் மற்றும் பேச்சுவார்த்தை மறுபுறம் என்ற கொள்கையை எந்த ஜனநாயக நாடாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார்.
ஐநா-வுக்கான இந்திய பிரதிநிதி பாகிஸ்தான் நிருபருடன் கை குலுக்கும் காட்சி
பாகிஸ்தான் நிருபர்களுடன் கை குலுக்கிய ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி அக்பருதீனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.