வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது

410 0

மஸ்கெலியா – சாமிமலையில் இருந்து ஹட்டன் வரை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தந்தை மற்றும் மகன் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) காலை 8 மணி அளவில் சாமிமலை, ஹட்டன் பிரதான வீதியின் நோர்வூட் தியசிறிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றிற்கு இடமளிக்க முற்பட்ட வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.