மதுபோதையில் இருவருக்கிடையில் கைகலப்பு, ஒருவர் அடித்துக் கொலை

24 0

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மதுரங்குடா பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (12) இடம்பெற்றதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் மூவர் ஒன்றிணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே குறித்த ம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மதுரங்குழிய-கோடுவாடுவ பகுதியைச் சேர்ந்த வெல்லவகே சுமித் பிரணாந்து (40 வயது) என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அடித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.