நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே அவசியம் ஜனாதிபதித் தேர்தல் அல்ல- சம்பந்தன்

385 0

நாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த உறுப்பினர்களுக்கு நாட்டின் நிலவரம் தொடர்பாக தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், “1994ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும்.

எனவே தற்போது ஆராயப்பட வேண்டிய விடயம் யாதெனில், மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையிலே பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறையானது நியாயபூர்வமானதா என்பதுமேயாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அவை அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் விளைவாக பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஆனால் அவற்றுள் எதுவும் முன்னெடுத்து செல்லப்படவில்லை.

எனவே தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியலமைப்பே ஆகும்” என தெரிவித்துள்ளார்.