சு.க.விலிருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவிக்கும் மஹிந்த ஒன்றிணைந்து செயற்படவும் தயாராம் !

240 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையினாலேயே நாம் கட்சியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனைத் தவிர எமக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் வேறு எவ்வித பிரச்சினையும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவாட்ட உள்ளுராட்சி மன்ற  தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் நேற்று விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் அனைவரும் இலங்கையர்கள். எமக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் வேறு எவ்வித பிரச்சினையும் இல்லை.

தற்போது மீண்டும் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நாம் ஒன்றிணைந்து செயற்படுவதில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.

எனவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

கடந்த வாரம் எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு சுமூகமானதொரு சந்திப்பாக அமைந்தது. அதற்கிணங்க அவர் சிறந்தவொரு தீர்மானத்தில் இருப்பதாக நான் நம்புகின்றேன். எனவே எமக்கு ஒன்றிணைந்து பயணிப்பது கடினமானதல்ல என்றார்.