அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற உள்ளக போர் நாட்டின் அனைத்து பாகங்களையும் அழித்துவிட்டுள்ளது.எனவே நவம்பர் மாதம் நடைப்பெற வேண்டிய ஜனதிபதி தேர்தல் மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளியாகவே கருதப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு – கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
அரசாங்கத்திற்குள் பல அரசாங்கங்கள் உள்ளதனால் நாட்டின் ஸ்தீரதன்மை பாதிக்கப்பட்டுள்ளது.எவ்விதமான கொள்கையுமற்ற வகையில் ஆட்சியாளர்கள் நாட்டை நிர்வகிக்கின்றனர்.
இதனால் பிரச்சினைக்கு தீர்வில்லாது பல பிரச்சினைகள் மேலோங்கியுள்ளன. நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பது அடிப்படையானதொரு விடயமாகும். ஆனால் அதனை கூட முறையாக செய்ய முடியாதளவிற்கு தற்போதைய அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் இன்று வரை மக்களின் அச்சநிலை போக்கப்பட வில்லை. தாக்குதல் தொடர்பில் அரசியல்மயப்பட்ட விசாரணைகளே காணப்படுகின்றன.
நேர்மையான விசாரணைகள் அற்ற நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகங்களை வெளியிடுகின்றனர்.பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜரான பிரதமர் அங்கு தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கம் எந்தளவு தேசிய பாதுகாப்பு விடயத்தில் கவணயீனமாக இருந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

