பிராந்தியத்தில் இல்லாத சட்டம் இலங்கையில் தேவையில்லை

214 0

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை.” என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“நிரந்த தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படபோது, அதற்கான மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கோரியிருக்கிறேன். அதற்குள் இதற்கான நிரந்தர தீர்வுகுறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாட்டில், தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில்  நேற்று (4)  நடைபெற்ற, முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, “ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. அதில் பகடைகளாக பாவிக்கப்பட்டவர்கள் ஒரு கூலிப்படையினர்.

இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம். ஆனால், ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இதுகுறித்து அபாய அறிவிப்பை விடுத்திருந்தது.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு எத்தனிப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விடயங்களைப் பார்த்து பதற்றப்படுவதை நாங்கள் முதலில் நிறுத்தவேண்டும். இஸ்லாம் வளர்ந்தமைக்கு பிரதான காரணம் சகிப்புத்தன்மையாகும். ஒருசில பித்தலாட்டக்காரர்களின் செயற்பாடுகளினால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்ற மனப்பாங்கை கைவிடவேண்டும்.

அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்த மறுநாள் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், நிகாப் மற்றும் புர்கா உடையை நிரந்தரமாக தடைசெய்வதற்கான உத்தரவை அமைச்சர் தலதா அத்துகோரள சமர்ப்பித்திருந்தார்.

அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட்டால் நிகாப், புர்கா தடை இல்லாமல் போய்விடும். அதன்பின்னர் நாட்டிலுள்ள பேரினவாத அமைப்புகள் அதை தூக்கிப்பிடித்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் அதை நிரந்தரமாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறது.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நான் வாசித்துப் பார்த்தபின், இந்தப் பிராந்தியத்தில் நிகாப், புர்கா ஆடைகளை தடைசெய்யும் முதலாவது நாடாக இலங்கை வருவதற்கு எந்த தேவையுமில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்.

ஜனாதிபதிதான் இந்த விடயத்தை அவசரப்படுத்துவதாக தலதா அத்துக்கோரள சொன்னார். நான் ஜனாதிபதியிடமும் விடயத்தை எடுத்துக்கூறி, சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசி மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கேட்டிருக்கிறேன். இந்த சட்டமூலம் குறித்தும் நான் பிரதமரிடம் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறேன்” என்றார்.