ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு குழுவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு தரப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தும் பிரதான நோக்கத்தின் காரணமாகவே இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணிக்கான ஒப்பந்த நிகழ்வுகளை ஒத்திவைத்ததாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பிரதான பங்காளிக் கட்சிகளை இணைத்து ஜனநாயக தேசிய முன்னணிக்கான ஒப்பந்தத்தை செய்ய ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்தபோதிலும் இறுதி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனநாயக தேசிய முன்னணிக்கான ஒப்பந்த நிகழ்வு இன்று இடம்பெறவிருந்த போதிலும் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அதனை எமக்கு அறிவித்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகள் மற்றும் புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் சிலர் உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கூட்டணியில் பங்குகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆகவே பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
பாரிய கூட்டணியை அமைக்கும் வேளையில் அதன் செயலாளர் ஐக்கிய தேசிய கட்சி போன்று பிரதான கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது. பொதுச்செயலாளர் மிகவும் பொறுப்பான ஒருவராக இருக்க வேண்டும்.
எனவே எமது கட்சியின் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதனை நாம் கட்சியின் தலைமையிடம் கூறினோம். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இப்போது முந்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். எமது தாப்பில் தகுதியான பலமான வேட்பாளர்கள் உள்ளனர்.
ஆகவே அவர்களில் ஒருவரை களமிறக்கி தேர்தலில் வெற்றிபெற முடியும். மாகாணசபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் எல்லை நிர்ணயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் அடுத்ததாக நடத்தப்பட வேண்டிய தேர்தல் நெருங்கியுள்ள காரணத்தினாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்ததாக அமையும். ஆகவே வரும் நாட்களில் எமது வேட்பாளர் பெயர் வெளிவரும் என்றார்.

