சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது ; ரிஷாத்

265 0

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் செலுத்த முடியூமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் எமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று மாலை (02) கிண்ணியாவில் இடம்பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது கதையாடல்கள் இடம்பெறுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் நம்மவர்கள் அது தொடர்பான கருத்தாடல்களை ஆரம்பித்துள்ளனர். நாம் எதற்கும் அவசரப்பட முடியாது. எழுந்தமானமான முடிவுகள் நமது எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக அமையப் போவதுமில்லை.

புத்திசாதுரியமாக இந்த விடயத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது ஒன்று பட்டு இருந்தோமோ அவ்வாறே எதிர்கால அரசியல் தீர்மானங்களிலும் ஒன்று பட்டு சமூகம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் ஜமிய்யதுல் உலமா மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புக்கள் சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் மக்களுக்கு சரியான தெளிவுகளை வழங்க வேண்டும் என்பதே எனது அவாவாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமிர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உரையாற்றினர்.