உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வரையில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூவின மதம்சார்ந்த நிகழ்வுகளை அச்சமின்றி நடத்தலாம் என்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே   பிரதமர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் தொடந்தும்  தெரிவிக்கையில்,

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் சுற்றுலாத்துறைக்கு பாரியதொரு தாக்கம் ஏற்பட்டது. ஆனால் நடப்பாண்டில் கூடிய சுற்றுலாத்துறை வருமானத்தை உத்தேசித்து பல்துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களினால் பின்னடைவு ஏற்பட்டது. எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

சம்பவம் இடம்பெற்று இரண்டு மாத கால பகுதிகளுக்குள் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளோம். ஐ.எஸ் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஈர்க்கப்பட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவசரகால சட்டத்தின் கீழ் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.  அதே போன்று தொடர்ந்தும் விசாரணைகள் ஊடாக ஏனைய தொடர்புகள் குறித்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

கண்டியில் இடம்பெறவுள்ள எசல பெரஹெரா மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறவுள்ள பெரஹெராக்களையும் நடத்தக் கூடிய பாதுகாப்பான சூழல் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வடக்கு நல்லூர் திருவிழா மற்றும் கொழும்பில் இடம்பெறவுள்ள இந்து ஆலய நிகழ்வுகளை எவ்விதமான அச்சமும் இன்றி பாதுகாப்பாக நடத்த முடியும். மேலும் மடு தேவாலய வருடாந்த திருவிழாவையும் பாதுகாப்பாக நடத்த முடியும்.

மடு தேவஸ்தான , தேவத்த மற்றும் தலவில தேவாலயங்களின் வருடாந்த திருவிழாக்களையும் அச்சமின்றி நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை உறுதியளித்துள்ளது. ஆகவே நாட்டிலிருந்த அச்சுறுத்தல் நிலை  விலகி சாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலாத்துறையை நாம் மேலும் விருத்தி செய்ய வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை எவ்விதத்திலும் குறையவில்லை. ஜூலை மாதத்தில் மாத்திரம் 50 – 55 வீதமான சுற்றுலாப்பயணகள் வருகை தந்துள்ளனர். ஆகவே எவ்விதமான பிரச்சினையும் இன்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.

விமான நிலைய கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா விடுதிகளில் விலை குறைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை வெளிப்படுகின்றது. சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச சஞ்சிகைகளின் இலங்கைக்கான முன்னுரிமைகள் எவ்விதத்திலும் குறைக்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.