மோடி நினைத்தால் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் – முக ஸ்டாலின்

213 0

பிரதமர் மோடி நினைத்தால் கர்நாடகத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து லத்தேரி, கே.வி.குப்பம், குடியாத்தம் சித்தூர் கேட், கொண்டசமுத்திரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

கதிர்ஆனந்த் உங்கள் ஊரில் இருப்பவர். நேரில் சென்று அவரிடம் எந்த ஒரு குறையையும் கூறலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த தேர்தல் நடத்திருந்தால் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி., ஆகியிருப்பார். சிலர் செய்த சதியால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தி.மு.க.வை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

அந்த சதி முறியடிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்ற அனைத்து தொகுதியிலும் 3 லட்சத்தில் இருந்து 5½ லட்சம் வரை ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அந்த தேர்தலில் 24 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றோம். வேலூரில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றால் இதோடு சேர்த்து 25 தொகுதிகள் ஆகும்.

பாராளுமன்றத்தில் தி.மு.க. 3-வது இடத்தில் உள்ளது. 22 சட்டசபை இடைத்தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர் உட்பட 13 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களைத் தான் பெற்றது. இப்போது தி.மு.க. வெற்றி பெற்ற 13 இடங்கள் ஏற்கனவே அ.தி.மு.க. வசம் இருந்ததில் 12 இடங்கள் ஆகும்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பொய்யான வெற்றி பெற்றதாக அ.தி.மு.க.வினர் சொல்கின்றனர்.

பொய் என்று சொன்னாலும் பரவாயில்லை. வாக்காளர்களுக்கு ‘மிட்டாய்’ கொடுத்து தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றதாக அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். மிட்டாய் என்றால் என்ன கமரகட்டா? பல்லி மிட்டாயா?

சரி அப்படியே நாங்க மிட்டாய் கொடுத்து ஜெயிச்சதாக வைத்துக் கொண்டாலும், தேனி தொகுதியில் நீங்கள் ஜெயிச்சீங்களே, அங்க நீங்க என்ன கொடுத்தீங்க? அல்வா. அதுவும் திருநெல்வேலி அல்வா இல்லை. டில்லி அல்வா கொடுத்து ஜெயிச்சீங்களா?.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்றும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். தற்போதும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று கூற முடியாது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போன்று தமிழகத்திலும் ஏற்படலாம். மோடி நினைத்தால் அது நடக்கும்.

இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் அதனால் மோடி நினைக்கவில்லை.

கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராமல் மக்களின் ஆதரவை பெற்று வாக்குகள் வாங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருணாநிதி கூறுவார். அதன்படி மக்களின் ஆதரவை பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார் என அ.தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். கனவு காண வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் ஆட்சி கவிழ்ப்பு நினைவாக போகிறது.

இந்தியா முழுவதிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக ஓட்டுகளை பெற்று ஓட்டு சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. டில்லிக்கு 38 எம்.பி.க்களும் கில்லி மாதிரி சென்றுள்ளனர். தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அவர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருக்கும் வரை மத்திய அரசால் நீட் தேர்வு கொண்டுவர முடியவில்லை.

ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மோடியா, லேடியா என பார்ப்போம் என கூறினார். இதற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.

ஆனால் அவரது பெயர் சொல்லி தற்போது நடக்கும் ஆட்சியை டில்லியில் அடகு வைத்துவிட்டனர்.

துரைமுருகன் யார் என நான் சொல்லி உங்களுக்கு தெரியப்போவதில்லை. அவரது மகனான கதிர் ஆனந்தும் இத்தொகுதியின் குறைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூற அவருக்கு ஓட்டு அளியுங்கள்.

கருணாநிதி பதவிப் பிரமாணம் செய்த விழா மேடையிலேயே தேர்தலில் அளித்த வாக்குறுதியாக ரூ.7ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அவருடைய மகன் நான்.

நானும் சொன்னதை செய்யமாட்டேனா. தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. தயவில் நடந்து வருகிறது. இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு விரைவில் அமித்ஷா அ.தி.மு.க. என பெயர் மாறும் போல உள்ளது. விரைவில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது முதலாவதாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். தொடர்ந்து விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் இன்று வாணியம்பாடி சட்டமன்ற தொகுக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.