கதிர்காமம் மாணிக்கக்கங்கைக்கு அருகாமையில் துப்பாக்கிப் பிரயோக மோதலில் ஒருவர் படுகாயம்

307 0

சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வோருக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குமிடையில் இடம்பெற்ற கடும் துப்பாக்கிப் பிரயோக மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை அரசினர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று  மாலை கதிர்காமம் மாணிக்கக்கங்கைக்கு அருகாமையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான நீரோடையில் இடம்பெற்றுள்ளது.

கதிர்காமம் வள்ளிமாதா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு  துப்பாக்கிப் பிரயோகத்தில் படுங்காயங்களுக்குள்ளானவராவார்.

சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வதாகக் கிடைத்த தகவலொன்றினையடுத்து வன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு விரையவே இரத்தினக்கல் அகழ்ந்தோர் குறித்த உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வேளையிலேயே  இரத்தினக்கல் அகழ்வோரில் ஒருவர் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார். அத்துடன் துப்பாக்கிப் பிரயோகம் நிறுத்தப்பட்டு காயமடைந்தவரை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன்போது ஏனைய இரத்தினக்கல் அகழ்வோர் நால்வரும் தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்ற நபரிடமிருந்துர துப்பாக்கியொன்றையும்  பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபருக்கு ஆரம்ப சிகிச்சைகள் கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது மேலதிக சிகிச்சைகளுக்காக  ஹம்பாந்தோட்டை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.