முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல்

317 0

kokilaj1முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவராத்தை அண்மித்த பகுதியில் மீனவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு சட்டரீதியான  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் முகாமிட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ள புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மீனவர்களே தமிழ் மீனவர்கள் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிப்பதற்காக கடற்தொழில் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார், தமிழ் மீனவர்களை உதவிக்கு அழைத்து சென்றிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்களுக்கு தடைசெய்யப்பட்ட கூட்டுவலை கட்டுவதற்கும், முகத்துவராப்பகுதியில் இயந்திர படகு மூலம் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் இந்த வருட இறுதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் பயன்படுத்தும் வலைகள் தடைசெய்யப்பட்டவை எனவும் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சந்திப்பில் கடற்தொழில் பணிப்பாளர் அறிவித்திருந்தார்.

எனினும் இந்த அறிவித்தலுக்கு தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக கடற்தொழில் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார்  கொக்குளாயில் தடைசெய்யப்பட்ட வலைகளை பிடிப்பதற்கு தமிழ் மீனவர்களை உதவிக்கு அழைத்து சென்றிருந்தனர்.

இந்த நிலையில் புல்மோட்டை மீனவர்கள் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் தமிழ் மீனவர்கள் இருவர் காயமடைந்தனர். பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மீனவர்கள் கவலைவெளியிட்டனர்.

முல்லைத்தீவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மீனவர்களான தாம் தொடர்ச்சியாக அமைதி காத்து வருவதாக தெரிவிக்கும் மீனவர்கள், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

kokkilaj