திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி இவ்விடயம் குறித்து தங்களது விவாதங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மேல்நீதிமன்றம் சில இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது.
அதாவது கன்னியா பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு அங்கு அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது.
மேலும் கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் சென்று வருவதையும் சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

