’உரிமை பத்திரம்’ வழங்க இணக்கம்

241 0

தோட்டப்புற வீட்டு காணிகளுக்கு “உரிமை பத்திரம்” வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, “தோட்டப்புற வீட்டு காணிகளுக்கு, “உரிமை பத்திரம்” தரமாட்டேன், 99 வருட “குத்தகை பத்திரம்”தான் தருவேன் என அமைச்சர் நவீன் திசாநாயக்க அமைச்சரவையில் அடம் பிடித்தார்” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தானும் அமைச்சர் திகாம்பரமும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நவீன் திசாநாயக்கவின் தீர்மானத்தை முறியடித்தாகவும், இறுதியில் “குத்தகை பத்திரம்” இல்லை. “உரிமை பத்திரம்”தான் என அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அமைச்சர் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நாட்டில் எல்லோருக்கும் வழங்கப்படும் அதே உரிமை பத்திரம் தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தோட்ட தொழிலாளருக்கு மட்டும் குத்தகை பத்திரம் வழங்கி, அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக நடத்த இடந்தர முடியாது என, இதன்போது அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு புரியவைத்ததாகவும் அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளார்.

அமைச்சர்களாக கயந்த கருணாதிலக, மலிக் சமரவிக்கிரம, தயா கமகே, சஜித் பிரேமதாச, சாகல ரட்னாயக்க, அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் தமது நிலைப்பாட்டை ஆதரித்து குரல் கொடுத்ததாகவும் அமைச்சர் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.