மாந்தை மேற்கு பிரதேசத்தின் வலிமையை இப்போதே நான் உணர்ந்தேன் – எஸ்.கேதீஸ்வரன்

274 0

மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் தலைவர் ம.கனகலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மன்னார் மாவட்டத்தில் சைவத்திற்கும், தமிழிற்கும் சேவை செய்கின்ற இங்குள்ள அதிதிகளுக்கு நான் முதலில் தலைசாய்க்கின்றேன்.

இந்த விழாவானது இரு விடையங்களை முக்கியமானதாக சுட்டிக்காட்டுகின்றது.

இலைமறை காயாக சமூகத்திற்கும், தமிழிற்கும், சைவத்திற்கும் சேவை செய்த பலரை வெளி கொண்டு வந்துள்ளீர்கள்.

அந்த வகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துள்ளேன்.

நான் பிரதேச செயலாளராக மன்னார், முசலி பிரதேசச் செயலகங்களில் கடமையாற்றியுள்ளேன்.

ஆனால் மாந்தை மேற்கில் உள்ள வலிமையையும் துடிப்பையும் நான் எங்கும் காணவில்லை. இலைமறை காயாக சமூகத்திற்கும், தமிழிற்கும், சைவத்திற்கும் சேவை செய்த அனைவரையும் நான் பாராட்டுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக  மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.சிறிபாஸ்கரன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரத்தினம், இலங்கை சைவ நெறி கழகத்தின் தலைவர் கி.பிரதாபன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன், இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் மு.கதிர்காமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, விருது வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதே வேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளருக்கு ‘மாந்தை மேற்கு ஒளிக்கீற்று’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.