மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை

415 0

download-1மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.

இதனால் கடற்படையினருக்கும் – கிராம மக்களுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மக்களால் பிடிக்கப்பட்ட கடற்படைச் சிப்பாயை காப்பாற்றுவதற்காக கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனார்.

இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து இன்று காலை கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்களுடனும் கடற்படையினர் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர்.

இதற்கமைய முத்தரிப்புத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் அரிப்பு கிராமத்தில் அண்மைய நாட்களாக திருட்டுச் சம்பவங்களும், இரவு நேரங்களில் வீடுகளுக்குப் புகுந்து அச்சுறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 9.30 அளவில் வீடொன்றுக்குள் ஒருசிலர் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து கிராமத்தவர்கள் திரண்ட நிலையில் அருகிலுள்ள பற்றைக்குள் சந்தேகநபர்கள் மறைந்திருக்கின்றனர். எனினும் கிராம மக்கள் இணைந்து பாரிய தேடுதலொன்றை மேற்கொண்டு அங்கு மறைந்திருந்த இருவரையும் மடக்கிப்பிடித்த கிராம மக்கள் நையப்புடைத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்ற போதிலும், மற்றைய நபரை அடித்து இழுத்துச் சென்ற மக்கள், தேவாலயத்தில் கட்டிவைத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த கடற்படையினர் குறித்த நபரை விடுவிக்குமாறு அச்சுறுத்திய போதிலும் மக்கள் விடுவிக்க மறுத்து கடற்படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கடற்படையினர் துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்து அச்சுறுத்தியுள்ளனர். எனினும் தாம் பிடித்த கடற்படைச் சிப்பாயை விடுவிக்க மறுத்த மக்கள், பொலிசாரிடமும் ஒப்படைக்க மறுத்ததுடன், மன்னார் நீதவானிடமே ஒப்படைப்பதாக கூறினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி எஸ் பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மறைமாட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் அங்கு வந்த சிலாபத்துறை பொலிசாரும், உயர் அதிகாரிகளும் கடற்படைச் சிப்பாயை ஒப்படைக்குமாறு மக்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

நீண்டநேர பேச்சுவார்த்தையை அடுத்து அரிப்பு கிராம மக்கள் குறித்த படைச்சிப்பாயை சிலாபத்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும் கடற்படையினருக்கும் – மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் முத்தரிப்புத்துறையில் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களிடம் கடும் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சகோதரர்களான சில்வஸ்ரர் மற்றும் இம்மான் எனும் இரண்டு மீனவர்களை கைதுசெய்த, கடற்படையினர் சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று தடுத்த வைத்துள்ளனர்.

கடலுக்கு செல்வதற்கான படகுக்கான வரி செலுத்தியதற்கான ஆதாரத்தை காட்டத் தவறியதை அடுத்தே கடற்படையினரால் மீனவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக முத்தரிப்பு பிரதேச அருட்தந்தை டெனிகலிஸ்சடர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நேற்று இரவு அரிப்பு பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின் எதிரொலியாகேவே கடற்படையினர் இவ்வாறு கடுமையாக நடந்துகொள்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.