பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து வெடித்தது

240 0

கோவை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் தரையில் விழுந்து வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை அருகே சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படை அதிகாரிகள் விமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்று காலை மிக்-21 ரக விமானத்தில் பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். இருகூர் அருகே பறந்தபோது, அந்த விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விவசாய நிலத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அந்த இடத்தில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தரையில் விழுந்த பெட்ரோல் டேங்க் பாகங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.

இதற்கிடையே, பெட்ரோல் டேங்க் கழன்று விழுந்த மிக்-21 விமானம் சூலூர் விமானப்படை தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பெட்ரோல் டேங்க் விழுந்த பகுதிக்கு விமானப்படை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.