டி.கே.ராஜேந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார்புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமனம்புதிய தலைமைச் செயலாளர் சண்முகம்!

223 0

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழகத்தின் 45-வது தலைமைச் செயலாளராக, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் இன்று (ஞாயிற்றுக் கிழமை) பணி ஓய்வு பெறுகிறார்.
கே.சண்முகம் நியமனம்
அவரை தொடர்ந்து 46-வது தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அரசாணையை கிரிஜா வைத்தியநாதன் நேற்று பிறப்பித்தார். அதில், கிரிஜா வைத்தியநாதன் 30-ந் தேதி பிற்பகலில் பணி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றும் கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம்
புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி பிறந்தார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அவரது சொந்த ஊராகும். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்று உள்ளார்.
பின்னர் ஐ.ஏ.எஸ். ஆன அவர் 1985-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி தமிழக அரசு பணியில் சேர்ந்தார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். சேரன்மகாதேவியில் பயிற்சி உதவி கலெக்டராக பணியை தொடங்கிய இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் மற்றும் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில்…
2010-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். திறமையான பணியின் காரணமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் அவர் நிதித்துறை செயலாளராக நீடித்தார். அந்த வகையில் கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 4 முதல்-அமைச்சர்களிடத்திலும் பணியாற்றி நற்பெயரை ஈட்டியிருப்பவர் அவர்.
நிதித்துறையில் அவர் பெற்ற அனுபவம் காரணமாக அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிறப்பாக செயல்படுபவராக திகழ்ந்தார். நிதி நெருக்கடி காலங்களிலும் நிதிச்சுமையை குறைக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியவர் கே.சண்முகம்.
நாளை பதவி ஏற்பு
கே.சண்முகம் நாளை (திங்கட்கிழமை) காலையில் புதிய தலைமைச் செயலாளராக பதவி ஏற்றுக்கொள்வார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தான் ஓய்வு பெறுவதையொட்டி, கிரிஜா வைத்தியநாதன் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி கவர்னர் மாளிகையிலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திலும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
புதிய டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி
இதேபோல் தமிழக காவல்துறையின் தலைவரான (சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.) டி.கே.ராஜேந்திரன் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு பதிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
புதிய டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி இன்று மாலை 3.15 மணி அளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, டி.கே.ராஜேந்திரன் விடை பெறுகிறார்.
டி.கே.ராஜேந்திரனுக்கு இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழாவும், போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.
வாழ்க்கை குறிப்பு
புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்க இருக்கும் ஜே.கே.திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஜே.கே.திரிபாதியின் உண்மையான பெயர் ஜலடகுமார். அந்த பெயரை சுருக்கமாக ஜே.கே. என வைத்துக்கொண்டு திரிபாதி என்ற தனது குடும்ப பெயரையும் இணைத்து உள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பிஎல். பட்டப்படிப்பு படித்துள்ள ஜே.கே.திரிபாதி பி.எச்.டி.யும் முடித்து உள்ளார். 1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தமிழக காவல்துறையில் அடியெடுத்து வைத்தார்.
முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கிய இவர், அதன்பிறகு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் சூப்பிரண்டாக பணியாற்றினார். டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக திறம்பட பணியாற்றினார்.
ரவுடிகள் ஒழிப்பு
தென்சென்னை இணை கமிஷனராக பொறுப்பு வகித்து உள்ளார். ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற பிறகு மதுரையில் தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்தார். அதன்பிறகு ஆயுதப்படை, பொருளாதார குற்றப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றிலும் ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்து உள்ளார்.
கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றபிறகு சென்னை போலீஸ் கமிஷனராக 2 முறை பணியாற்றி உள்ளார். அதன்பிறகு சிறைத்துறையிலும் கூடுதல் டி.ஜி.பி.யாக பணிபுரிந்து இருக்கிறார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பதவி வகித்து உள்ளார்.
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது பதவி வகித்து வருகிறார். சிறந்த பணிக்காக ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார்.
தமிழகத்தில் சமூக காவல் பணி என்ற மக்கள் சேவை பணியை இவர்தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
இவர் தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றியபோது என்கவுண்ட்டர் முறையில் 16 ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
குடும்பம்
ஜே.கே.திரிபாதி சென்னை அண்ணாநகரில் குடும்பத்தோடு வசிக்கிறார். இவரது மனைவி பெயர் அனுஜா திரிபாதி. இவரும் பட்டதாரி. ஜட்வன் திரிபாதி எனும் மகனும், ஜிகிஷா என்ற மகளும் உள்ளார்கள். மகள் டாக்டர் பட்டமும், மகன் என்ஜினீயரிங் பட்டமும் பெற்று உள்ளனர்.