தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்யலாம்!

371 0

வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேரா அண்மையில் வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடைவித்திருந்தார்.

இந் நிலையில் 20 முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்திருந்ததுடன்  இது தொடர்பில் சுசந்த பெரேராவுக்கு எதிராக முறைப்பாடொன்றையும் அளித்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டினை மையப்படுத்தி பொலிஸார் மாரவில நீதிவானுக்கு இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் மாரவில வென்னப்புவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்டோரை இன்றைய தினம் மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்று முன்தினம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே அது தொடர்பான விசாரணை இன்று மாரவில நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிவான்,  தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவுக்கு உத்தரவிட்டார்.