உலக சுகாதார நிறுவனத்தின் நிறைவெற்று குழுவின்  பிரதித்தலைவர்  பதவியை சுகாதார, சுதேச மருத்தவ அமைச்சர்  ராஜித சேனாரத்ன சுய இலாபத்திற்காக தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியிருக்கும்  அரசாங்க  வைத்திய அதிகாரிகள் சங்கம் எந்த  அடிப்படையில் அவருக்கு  அந்த பதவி  வழங்கப்பட்டது  என்பது   தொடர்பில்  தெளிவுபடுத்துமாறு அந்த  நிறுவனத்திடம்  கேட்டிருக்கின்றது.

இது தொடர்பில்  மகஜரொன்றை கொழும்பிலுள்ள  உலக  சுகாதார  நிறுவனத்தின்  வதிவிட  பிரதிநிதி டாக்டர்  ராசியா  பென்ட்சேயிடம்  இன்று வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர்  ஹரித  அளுத்கே  தலைமையில் சென்ற  குழுவினர் கையளித்தனர்.

அமைச்சர் சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட  அந்த  பதவி  தொடர்பில்  தங்களால்  எழுப்பப்பட்டிருக்கும்  சந்தேகங்களுக்கு  சாத்தியமான  அளவு  விரைவில்  விளக்கத்தை  தருமாறு வதிவிட பிரதிநிதியிடம்  வேண்டுகோள்விடுத்திருக்கும்  வைத்திய  அதிகாரிகள்  சங்கம்   அவரை  சந்திப்பதற்கு  தங்களது  பிரதிநிதிகளுக்கு  நேரம்  ஒதுக்கித்தருமாறு  கேட்டிருக்கின்றனர்.

இந்த மகஜரின்  பிரதிகள் ஜனாதிபதி செயலாளர்,  பிரதமரின்  செயலாளர்,  சுகாதார  செயலாளர், சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  நாயகம்  மற்றும்  இலங்கையில் உள்ள  துறைசார்  நிபுணத்துவ  கல்லூரிகளின்  செயலாளர்களுக்கும்  அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.