எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்

148 0

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வெற்றியடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கட்சி மாறுவதில் வரலாறு படைத்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது.

கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 10 இலட்சம் ரூபாய் நிதி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனினால் இந்த ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய இராஜகோபுரத்திற்கான நிர்மாணப்பணிகள் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், “ஜனாதிபதி மைத்திரி, தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என்கின்றார். ஆனால், தெரிவுக்குழுவின் மூலம் பல உண்மைகள் அம்பலத்திற்கு வருகின்றது. அதனை நிறுத்த வேண்டுமென கூறுவது தவறு.

ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதற்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் அல்ல, வேறு எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் வெற்றியடைய மாட்டார்” என மேலும் தெரிவித்துள்ளார்.