60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்:கற்பித்தல் திறனை பாதிக்கும்தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

272 0

60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாசாரத்தை அமல்படுத்துவது கற்பித்தல், கற்றல் திறனை பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாசாரம் 1 ஆசிரியர் 60 மாணவர்கள் என 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அறிவித்திருப்பது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும். தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை மாணவர்களுக்கு எடுத்து செல்வதில் ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமம் ஒருபுறம் இருந்தாலும் கற்கும் மாணவர்களுக்கு வகுப்பறைச்சூழல் கூட்டத்தில் பங்கேற்பது போன்று தோன்றும்.
மேலும், ஆசிரியர்- மாணவர் விகிதாசாரம் தொடக்க வகுப்புகளுக்கு (1 முதல் 5) ஒரு ஆசிரியர் 30 மாணவர்கள் என்றும், நடுநிலை வகுப்புகளுக்கு (6 முதல் 8) ஒரு ஆசிரியர் 35 மாணவர்கள் என்றும் உயர் வகுப்புகளுக்கு (8 முதல் 10) ஒரு ஆசிரியர் 40 என்றும், மேல்நிலை வகுப்புகளுக்கு (11 முதல் 12) ஒரு ஆசிரியர் 60 மாணவர்கள் என்றும் அறிவித்திருப்பது கற்பித்தல்-கற்றல் பணி பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் என்பது இடநெருக்கடி மட்டுமின்றி மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழலில்லாமல் ஒருவிதமான இறுக்கம் ஏற்படும். மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இஷ்டபட்டு செய்யும் கற்பித்தல்- கற்றல் கஷ்டபட்டு நடக்கும்.
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் சிறப்பாக அமைத்துவிட்டு அதனை எடுத்துச்செல்லும் வழி சரியாக அமைந்திடாவிட்டால் பயனற்றுப்போகும். முக்கியமாக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் பாடங்களை எளிமையாக எடுத்துச்செல்ல மாணவர்கள்-ஆசிரியர் விகிதம் குறைத்தால் மட்டுமே சிறப்பு பெறும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் விகிதாசாரத்தை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.