முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும்-ஹரீஸ்

278 0

இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு காணப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக்கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை செய்வதிலும் அவர்களின் கலாசாரம் மற்றும் ஆடைகள் தொடர்பாக விமர்சிப்பதிலுமே இருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் கெடுபிடிகள் தொடர்பாக குரல்கொடுப்பதை மிகவும் குறைவாகவே பார்க்கின்றோம். அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.