சிலருக்கு தமது வாக்கு வங்கிகளை உறுதிப் படுத்திக் கொள்ளப் பௌத்தம் அழிகிறது-லக்ஷ்மன்

340 0

இன்று முஸ்லிம்களுக்கு  விரோதமாக உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது அல்லது தற்கொலை செய்வது  பாவச் செயலாகும் என.அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

இலங்கையில் பௌத்த மதம் அழிவடைந்து வருவதாகப் போலிக் கருத்துக்களைச் சிலர் பரப்பிவருகின்றனர். அது நடக்கப் போவதில்லை இன்று முஸ்லிம்களுக்கு  விரோதமாக  உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன.

பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது அல்லது தற்கொலை செய்வது  பாவச் செயலாகும் எனப் பாராளுமன்ற அவைத் தலைவரும் அரச முதலீட்டு மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

நேற்று புசல்லாலையில் பௌத்த விகாரை ஒன்றில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பௌத்தர்கள் என்ற அடிப்படையில் விகாரைகளைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இலங்கையை 400 வருடங்களுக்கு மேல் அன்னியர்கள் ஆட்சி புரிந்தனர். அவ்வாறு ஐரோப்பியர்கள் ஆண்டுவந்த 400 வருட காலத்தில் அழிக்கப்பட முடியாத பௌத்த சமயம் தற்போது பௌத்த ஆட்சியில் எங்கனம் அழிவை நோக்கிச் செல்ல முடியும். ஆனால் சிலர் பௌத்தம் அழியப் போவதாகவும் அல்லது அழிந்து விடும் என்றும் ஒரு மாயையை ஏற்படுத்தி வருவது கவலை தரும் விடயமாகும்.

ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் என மூன்று பிரிவினர் இலங்கையை அவ்வப்போது ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் கூட பௌத்த சமயம் அழிவை நோக்கிச் செல்லவில்லை. அப்படியாயின் தற்போது அது எப்படி நடக்க முடியும்.

சிலருக்கு தமது வாக்கு வங்கிகளை உறுதிப் படுத்திக் கொள்ளப் பௌத்தம் அழிகிறது என்ற தப்பான கருத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு அது ஒரு பிரசார உத்தியாக உள்ளது. இலங்கையில் ஆட்சிபீடமேறிய சகல அரசுகளும் பௌத்த மதத்தைப் பாதுகாத்து வந்துள்ளன.

இன்று முஸ்லிம் விரோத உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது அல்லது தற்கொலை செய்வது  பாவச் செயலாகும் அரச சட்டத்தின் படியும் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடியாது. அது குற்றச் செயலாகும் என்றார்.