அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்போது விதிகளை திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்டு, ஜெயலலிதாவால் வலிமைப்படுத்தப்பட்ட அ.தி.மு.க.வை தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தலைமையேற்று நடத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய போதி லும் மக்கள் அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதன்படி 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளனர். இந்த குழுதான் தற்போது அ.தி.மு.கவை வழி நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற மற்றும் 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியைத் தழுவியது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். 22 சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் 123 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
என்றாலும் தேர்தலிலும், தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைவர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் அ.தி.மு.க. தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு மந்திரி பதவி தருவதாக பா.ஜனதா கூறிய நிலையில் அதற்காக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நடந்து கொண்டவிதம் அ.தி.மு.க. தொண்டர்களை முகம் சுழிக்க வைத்தது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் வலுவான தலைமை இல்லாததே இதற்கெல்லாம் காரணம் என்ற குமுறலும் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது.
அ.தி.மு.க. நிர்வாகிகளின் இத்தகைய அதிருப்தியை பிரதிபலிக்கும் வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ராமச்சந்திரன் இருவரும் திடீர் போர்க்கொடி உயர்த்தினார்கள். அ.தி.மு.க.வுக்கு சுயநலமற்ற, வலிமையான ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை இருக்கக்கூடாது என்று எழுந்த கோரிக்கை வலுத்ததால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கட்சியினர் யாரும் பேட்டி மற்றும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதோடு வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைவரது கவனமும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மீது திரும்பி இருக்கிறது.
அ.தி.மு.க.வில் மொத்தம் 55 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். நாளை மறுநாள் இவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் 72 பேர், செய்தித் தொடர்பாளர்கள் 16 பேர், எம்.பி.க்கள் 13 பேர், எம்.எல்.ஏ.க்கள் 121 பேர் கலந்து கொள்ள உள்ளனர். மொத்தத்தில் சுமார் 300 பேர் நாளை மறுநாள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்
அ.தி.மு.க. நிர்வாகிகளில் சிலர் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்று விட்ட நிலையில் அ.தி.மு.க.வில் அவர்கள் வகித்து வந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். எனவே நாளை மறுநாள் கூடும் அ.தி.மு.க. கூட்டம் முழுமையான நிர்வாகிகள் கொண்டதாக இருக்கும். கூட்டத்தில் கடுமையான, காரசாரமான விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.
பா.ஜனதா கூட்டணி, தேர்தல் தோல்வி ஆகியவற்றை பற்றி தீவிரமாக விவாதிக்கப்படும். ஆனால் இரட்டை தலைமை தொடர்பான சர்ச்சைதான் அதிக விவாதத்தை ஏற்படுத்தும். அப்போது இரட்டை தலைமை முறையை ஒழித்து மீண்டும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் தற்போது இருக்கும் இரட்டை தலைமை முறையை நீக்கி விட்டு, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமானால் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு ஒப்புதல் பெற்றே கட்சி சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வர முடியும். எனவே பொதுக்குழுவை விரைவில் கூட்டுவதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
பொதுவாக அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒரு தடவையாவது நடத்தப்பட வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜெயலலிதா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பொதுக்குழுவை கூட்டுவார்.
கடந்த டிசம்பர் மாதம் பொதுக்குழுவை கூட்ட முடியாத சூழ்நிலை இருந்ததால் தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. சார்பில் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்து விட்டதால் பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை. எனவே விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூடும் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டப்படும்போது விதிகளை திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழுவில் தற்போது பெரும்பாலான உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். கட்சியினரை அவர் அரவணைத்து செல்வதே இதற்கு காரணமாகும். எனவே அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.
இதன் மூலம் அ.தி.மு.க. கட்சியின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்து விடும். முதல்-அமைச்சர் என்பதால் ஆட்சி அதிகாரம் ஏற்கனவே அவரிடம் குவிந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பெற்று விட்டால் ஆட்சி கட்சி இரண்டும் ஒரே தலைமையின் கீழ் வந்து விடும். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கும்.
துணை பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வை வலுப்படுத்த இது ஒன்றுதான் சிறந்த வழி என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்க தி.மு.க. தரப்பில் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய சவால்களை முறியடிக்க ஒற்றை தலைமையே சிறந்தது என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வில் மாற்றங்கள் வர உள்ளதாக தெரிய வந்துள்ளது.

