தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை சட்ட முரணானது என உத்தரவிடுமாறு கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இம்மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்று (07) காலை மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மனு எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி விசாரணைக்கு எழுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், இதனால் இந்த மனு மீதான விசாரணையை அந்த வழக்கின் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருப்பினும், இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விரான் கொரயா, இந்த மனு அவசர நடவடிக்கையாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையிலேயே 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

