நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் அரசாங்கம் அக்கறைக் காட்ட வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் சரிந்து போயுள்ள தேசிய பொருளாதாரம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து இனங்கள் மற்றும் மதங்கள் பாதுகாக்கப்படும் எனவும் ஆகவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் தேசிய பொருளாதாரத்தை உறுதி செய்வதிலும் அக்கறைக் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையினைப் பயன்படுத்தி மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்போரை கடுமையாக சாடியுள்ள சஜித் பிரேமதாச, குறித்த செயற்பாடுகள் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் எரிபொருள் இறக்குமதிகளை நாட்டினுள் குறைத்து தேசிய வருமானத்துக்கு பங்கம் விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்கள் நிதானமாகச் செயற்படுவதுடன் ஒரே நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

